பாட்டியும் நாகப் பாம்பும் 

Read story in

வெயில் நிறைந்த மதியம் ஒன்றில், எனது பாட்டி யசோதாம்மா, தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் நாகப்பாம்பொன்றைப் பார்த்தார். இந்திய மாநிலம் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைக்கிராமம் ஹம்ச்சாவில் தனியாக வசித்து வருபவர் அவர். பாட்டி அங்கில்லாத ஓரிரு மாதங்களில், ஆள் நடமாட்டமில்லாத அவள் கொல்லைப்புறத்தை அது தனது வீடாக்கிக் கொண்டது போலும். இந்தவகை நாகம் மிகவும் விஷத்தன்மை கொண்டது. இந்தியாவில் அதிகளவு பாம்புக்கடி மரணங்கள் நிகழக் காரணமான நான்குரகப் பாம்புகளில் இதுவும் ஒன்று. ஆனால் எதிர்பார்த்தபடி எனது பாட்டி அப்பாம்பைக் கண்டு பயப்படவில்லை. தன் முன்னே தோன்றியதற்காக அதற்கு நன்றி கூறி, யாரையும் துன்புறுத்தாமல் இருக்கும்படி வேண்டிக்கொண்டார். இந்துமதப் பண்பாட்டில் நாகப்பாம்பை நாகராஜா என வணங்குவது அனைவரும் அறிந்ததே.

அது வீட்டுக்குள் வராதபடி  பின்னர் கவனமுடன் இருந்தார்.  மாலை நான்கு மணியளவில் அது சாலையைக் கடந்து அயல்வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது. அங்கு ஒரு குழிக்குள் பதுங்கிய அதன் வால் மட்டும் வெளியே தெரிவது பாட்டியின்  பார்வையில் பட்டது. ஆர்வமிகுதியில் அதைத் தொடர்ந்து கவனித்தபடி இருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அதன் வால் விசித்திரமாக ஆடத் தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் அது குழிக்குள்ளிருந்து உப்பிய உடலுடன் வெளியே வந்தது. ஏதோ பெரிய இரையொன்றை விழுங்கிவிட்டு அது சிரமப்படுவது போலிருந்தது. இன்னும் சில நிமிடங்களில் அது மிகுந்த வலியில் துடிப்பதைக் கண்டார். இந்நேரத்திற்குள் அப்பாம்பு மீண்டும் பாட்டி வீட்டு முற்றத்தை எட்டியிருந்தது. விழுங்கிய எலியொன்றை திடீரென வாந்தியெடுத்தது. ஆயினும் இன்னும் பெரிய ஏதோ ஒன்று வயிற்றுக்குள் கிடக்க அது வலியில் துடித்தபடி இருந்தது. 

பாம்பின் வலியறிந்த பாட்டி  பதைபதைத்தார். பாம்பு பிடிப்பவர்கள் எவரையும் அவர் அழைக்க விரும்பவில்லை. அவர்கள் அதைப் பிடித்து ஏதேனும் ஒரு காட்டுப்பகுதியில் விட, அது மேலும் வலியில் துடிக்கக் கூடுமெனப் பயந்தார். அதனருகே ஒரு கிண்ணத்தில் நீர் வைத்தும் பயனின்றிப் போனது. மாலை ஏழு மணியளவில் அவர் முற்றத்தில் பிளந்த வாயுடன் அது மரித்துப் போனது. தன் வீட்டில் மரணம் நிகழ்ந்ததைப் போன்று பாட்டி அழுதார், அயல்வீட்டாரை அறிவித்தார், பின் பூசாரி ஒருவரை அழைத்து அதற்கு அந்திக்கர்மங்கள் செய்யச் சொன்னார். அதன் இறப்பிற்கான காரணம் எவருக்கும் தெரியவில்லை. விஷம்வைத்துக் கொல்லப்பட்ட எலிகளிரண்டை அது விழுங்கியதே காரணமென பாட்டி நம்பினார். 

பல்லுயிர்களுடன் பொருந்தி வாழும் இந்தியப் பண்பாட்டிற்கு இந்நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. அவையில் சில மனிதர்க்குத் தீங்கு விளைவிக்கும் உயிர்களாய் இருப்பினும் கூட. இப்பண்பாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளுறைந்திருக்கும் நம்பிக்கைகளும் விழுமியங்களும், மக்கள்தொகை மிகுந்த இந்நாட்டில் வனவிலங்குகளும் பாதுகாக்கப்பட வழிவகுக்கின்றன. குறிப்பாக பஞ்சபூதங்கள் அனைத்தும் இங்கு வணங்கப்படுகின்றன. யானை விநாயகனாக, ஆமை விஷ்ணுவாக, காட்டுப்பன்றி வராஹமாக, காவிரி நதி தாயாக வணங்கப்படும் வழக்கங்களையும்  காண்கிறோம். இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த புரிதலொன்று தினசரி வாழ்வில் பிணைந்திருப்பதைப் பார்க்கிறோம். பல பண்டிகைகளும் அதைப் பிரதிபலிக்கின்றன. 

விஷம் நிறைந்த நாகப்பாம்போடு வாழுமிடம் பகிர்வதைப் பாட்டி அறிந்திருந்தார்.  அதைப்பிடித்து வெகுதூரக் காட்டுக்குள் விடுவது அதைத் துன்புறுத்தும் என்ற புரிதல் அவருக்கு இருந்தது. உணவுச்சங்கிலியின் முக்கியத்துவத்தையும் எலிகளை விஷம் வைத்துக் கொல்வதின் சிக்கல்களையும் அவர் உணர்ந்திருந்தார். இவையனைத்தையும் இன்றைய தலைமுறைக்கு பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. பாம்பின் மறைவிற்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துவிட்டு, நான்காவது நாள் இந்நிகழ்வை எனது அம்மாவிற்கு விவரிக்கும் போது பாட்டி மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். பாம்போடு அவருக்கிருந்த தொடர்பு அறிவியலும் உணர்வும் கலந்த ஒன்று. 

இயற்கையோடும் வனவிலங்குகளோடும் மனிதர்க்குள்ள தொடர்பானது மத நம்பிக்கைகள், பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தது. நகரமயமாதலும் வணிகமயமாதலும் பெருகப்பெருக இயற்கையோடும் பண்பாட்டோடும் ஒருவர்க்குள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. வனவிலங்குகளோடுள்ள பண்பாட்டுத் தொடர்பு பாட்டியின் தலைமுறையோடு மறைய, வழக்கங்கள் பலதும் அதன் மூலக்காரணத்தையும் பொருளையும் இழந்து நிற்கின்றன. இந்துமதவழிபாடு கோவிலுக்குள் அடைபட்ட சிலைகளோடு நின்றுவிட, நாகராஜாக்கள் வாகனங்களில் அடிபட்டுச் சாகின்றனர், விநாயகரும் வராஹங்களும் மின்சாரம் பாய்ந்து மரிக்கின்றனர், திருமால்  கடத்தப்படுகிறார், வாயுதேவனும் காவிரித்தாயும் மாசுபாட்டுக்கு உள்ளாகின்றனர், அவர்களனைவரின் வசிப்பிடங்களும் அழிக்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே மிக அதிக அளவில் வனவிலங்குகள் வசிக்கும் இந்தியாவில், அவற்றின் நீடித்த இருப்பு நமக்கு அவையோடுள்ள பண்பாட்டுத் தொடர்பைச் சார்ந்துள்ளது. உணர்வும் பண்பாட்டு விழுமியங்களும் இல்லாமல் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் இயலாதெனும் எனது நம்பிக்கையைப் பாட்டியின் அனுபவம் உறுதி செய்தாலும், அந்நிகழ்வு என்னுள் பெரும் கேள்விகளை விதைத்தது. நமது பண்பாட்டின் முக்கியப் பகுதியாக வனவிலங்குகள் பாதுகாப்பை எப்படி மீண்டும் கொண்டு வருவது? அவ்வாறு கொணர்தல் கல்வி நிறுவனங்களின் வேலை மட்டுமா, இல்லை குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் அதில் பொறுப்புள்ளதா? அடிப்படையில், மனிதவாழ்வு பண்பாட்டு வழக்கங்களால் வடிவமைக்கப்படுகிறது. அப்பண்பாட்டிலுள்ள உண்மைச் சாரங்களை மீட்டெடுத்து நீட்டித்தல் இப்போதைய சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் மிகவும் முக்கியம்.

எழுத்து: ம்ருண்மயி அமர்நாத் 

புகைப்படங்கள்: சந்தோஷ் தாகலே மற்றும் V. புஷ்கர் (Creative Common Licence வழியாக)